இலங்கைமுக்கிய செய்திகள்

தமிழர்கள் புறக்கணிப்பு: முஸ்லிம்களுக்கு முன்னுரிமை: சஜித்தின் இனவாதம்!

சஜித் யாழ்ப்பாணத்தில் சிந்தியுங்கள் தமிழர்களே என்ற தலைப்பில் யாழில் பல்வேறு பகுதிகளிலும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, சஜித் தமிழர்களை புறக்கணிக்கிறார், தமிழர்கள் தொடர்பில் அமைதியான இனவாத போக்கை கொண்டுள்ளார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் பின்வருமாறு.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் கடந்த 9-ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 13-ஆம் திகதி வரை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.

ஆனால் இதே சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உள்ளிட்ட தென்னிலங்கை இனவாதிகள் என்று தமிழ் மக்களால் சொல்லப்படுகின்ற அனைவரையும் விட அமைதியான பெரிய இனவாதி என்றால் நம்புவீர்களா?

இது தொடர்பான உண்மையை ஆராய வேண்டுமென்றால் காலச்சக்கரத்தில் பலவருடங்கள் பின் நோக்கி செல்ல வேண்டும்.

அந்த வகையில் ஜக்கி தேசியக் கட்சி உருவான வரலாற்றில் இருந்து பார்ப்போம்.

முன்னாள் ஜனாதிபதியும் தற்பொழுது எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற சஜித்தின் தந்தையுமான பரேமதாச அவர்கள் இந்த ஜக்கிய தேசிக்கட்சியின் தலைவராக பதவி வகித்தபோது நடேசன் எனப்படுகின்ற தமிழரின் ஆலோசனையில் பாஸ்கரலிங்கம் சண்முகலிங்கம் உட்பட 5 தமிழர்களை வைத்துத்தான் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில்த்தான் கட்சியை வளர்த்து எடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக பிற்காலத்தில் ஜக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வந்த ரணில் விக்கிரமசிங்கவும் சுவாமிநாதன், மகேஸ்வரன் போன்ற பல தமிழர்களையும் இணைத்து கொண்டு பயணித்தார், தற்போதும் விஜயகலா போன்றோரை உள்வாங்கி பயணித்து வருகிறார்.

இதே வழிமுறையைத்தான் தமிழ் மக்களின் பிரதான எதிரியான ராஜபக்சக்களின் பொதுஜன பெரமுனவும் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உட்பட அனைத்து தென்னிலங்கை தேசிய கட்சிகளும் பின்பற்றி வருகின்றது.

ஆனால் ஜக்கிய தேசியக் கட்சியில் இருந்து பின்னர் ரணிலுடனான முரண்பாட்டுடன் ஜக்கிய மக்கள் சக்தி என்ற கட்சியை தொடங்கி தற்போது அந்த கட்சியின் தலைவராகவும், எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகிக்கின்ற சஜித் பிரேமதாச அவர்கள் தமிழர்களை குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழர்களை புறக்கணித்து வருகின்றார்.

அதற்கு காரணம் வடக்கு கிழக்கு தமிழர்கள் இந்த நாட்டில் தங்களுக்கான உரிமையைக் கேட்டு போராடியதுதான். அது தவிர அமைதியான முறையில் நயவஞ்சகமாக தமிழர்களை புறக்கணித்து வருகின்றார்.

உதாரணத்திற்கு இதுவரையான காலப்பகுதியில் இலங்கை முழுவதும் பாடசாலை மாணவர்களிற்காக 85 பேருந்துகளை வழங்கி இருக்கின்றார்.

ஆனால் வடக்கு கிழக்கில் இரண்டு பேருந்துகளை மாத்திரம் வழங்கி உள்ளார்.

அதை விட மோசமானது கடந்த 2009-ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்ததத்தில் பல தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள், அவயங்களை இழந்தார்கள், அந்த காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச அவர்கள் தென்னிலங்கையில் பெரும் எடுப்பிலான வெற்றிக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார், அதனை ஜக்கிய தேசியக் கட்சி புறக்கணித்து இருந்ததுடன் அந்த கட்சியை சேர்ந்த யாரும் வெற்றிகொண்டாட்டத்தில் கலந்துகொள்ள கூடாது என தீர்மானத்து அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து ஜ.தே.கட்சியை சேர்ந்த யாரும் அந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, ஆனால் அப்போது ஜக்கிய தேசியக் கட்சியில் இருந்த சஜித் பிரேமதாச அவர்கள் கட்சி தீர்மானத்தை மீறி கலந்து கொண்டு இருந்தார். அதற்காக அவர் மீது ஜ.தே.கட்சி விசாரனை மேற்கொண்டு இருந்தது.

இது தவிர தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாகவும் போர் குற்ற விசாரனை தொடர்பாகவும் தமிழர்களுக்கான தீர்வு விடயம் தொடர்பாகவும் பேசியது இல்லை. சிங்கள இராணுவத்தையோ அல்லது போர் தொடர்பான குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்த போதெல்லாம் அப்போதைய ஆட்சியில் இருந்து போரை முடித்து வைத்த ராஜபக்சக்கள் உள்ளிட்டோரை விட்டு கொடுத்ததும் இல்லை, அது தவிர இந்தியாவிற்கு சுற்றுாலாவிற்கு செல்ல கூட விரும்பியது இல்லை, அதற்கு காரணம் இவரது தந்தையான பிரேமதாசாவின் கொலைக்கு பின்னணியில் இந்தியா இருக்கின்றது என்பதை உறுதியாக நம்புகின்றார், அதே வேளை தமிழர்களை கண்டாலும் ஏன் அப்பாவை கொலை செய்தீர்கள் என்று கேட்கிறார் என சொல்லப்படுகிறது, அப்படியாயின் இவர் என்ன முடிவில் இருக்கின்றார்?

இது தவிர கடந்த காலத்தில் மறைந்த மகேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சென்று ஜக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு 5-வது இடத்தினை வாக்குகளின் அடிப்படையில் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

ஆனால் இன்று அதே தொகுதியில் மனோ கணேசன் அவர்கள் ஜக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டி இட்டு இறுதி இடத்தை பிடித்து தடுமாறித்தான் வெற்றி பெறுகின்றார்.

அதே தொகுதியில் யாழ்ப்பாண தமிழர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை, ஏனென்றால் வடக்கு கிழக்கு தமிழர்களை அதிகமாக வெறுக்கின்றார், அதையும் தாண்டி தமிழர்களும் வசிக்கின்ற கொழும்பு மாநகரசபை பகுதியில் தமிழர் ஒருவரை மாநகர சபை துணைமுதல்வராக கூட நியமிக்கவில்லை
.

இதேவேளை தமிழ் மக்களை புறக்கணிக்கும் இவர் முஸ்லிம் மக்கள் மீது அதீத பாசம் கொண்டு இருக்கின்றார். அதன் எதிரொலியாக ரவுப்ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் போன்றோரை தனது கூட்டணியில் இணைத்து வைத்து இருக்கின்றார். அது போதாது என்று ஜக்கிய மக்கள் சக்தியில் நேரடியாக முஜீபர் ரகுமான், மரைக்கார் போன்றோருக்கு இடம் கொடுத்து இருக்கின்றார், இதில் இருந்து புரிந்து கொள்ளக் கூடிய விடயம் வடக்கு கிழக்கு உட்பட இலங்கை தமிழர்களை ஆழ்மனதில் அவர் எதிரியாகத்தான் பார்க்கிறார், எந்த வடக்கு கிழக்கு தமிழர்களையும் கட்சிக்குள் எடுக்கிறார் இல்லை.

தற்போது ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் சாதாரண பொறுப்பில் இருக்கின்ற தமிழர்களுக்குகூட ஐக்கிய மக்கள் சக்தி மேடைகளில் சரியான சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படுவதில்லை, தற்போது இந்த கட்சியில் உள்ள தமிழர்களும் விலகும் தீர்மானத்திலேயே உள்ளனர்.

இதற்கு நல்ல உதாரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இறுதி பிரசார மேடையில் ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் கடும் கோபத்தில் இருந்ததால் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு கதைக்க வாய்ப்பு வழங்க வேண்டாம் என்று கிறிஸ்தவ ஆயர்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால் தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் உட்பட எந்த தமிழர்களுக்கும் மேடையில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வில்லை.

ஆக மொத்தத்தில் தமிழர்களின் வாக்கு மட்டும்தான் இவருக்கு தேவையே தவிர தமிழர்கள் தொடர்பில் அமைதியான இனவாத போக்கை இவர் கொண்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியும் தமிழர்களால் இனத்தின் எதிரியாக பார்க்கின்ற மஹிந்த ராஜபக்ச கூட தமிழில் பேசுகிறார் தமிழர்களோடு நெருக்கம் காட்ட முயற்சிக்கின்றார், போர்க்குற்ற விடயம் தவிர்ந்த ஏனைய விடயங்களில் தமிழர்கள் தொடர்பில் பேசுகிறார்.

ரணில் அவர்கள் கூட தமிழர்களின் தீர்வு விடயம் தொடர்பில் அரசியலுக்காகவாவது ஏதேனும் பேசுகிறார்.

ஆனால் சஜித் தமிழர்களின் சின்ன சின்ன விடயங்களுக்கு குரல் கொடுப்பதை போல் பாசாங்கு காட்டினாலும் தமிழர்களின் பிரதான பிரச்சினை தொடர்பில் பின் வாங்குவதையே வழக்கமா கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில்த்தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து யாழ்ப்பாணம் வந்திருக்கிறார்.

சிந்தியுங்கள் தமிழர்களே.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button