வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்வு
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
வயநாடு: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. காணாமல்போன 225 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் ஏராளமான மக்கள் மண்ணில் புதைந்தனர். இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணியில், 130 பேர் உயிரிழந்ததாக தெரியவந்தது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், கேரள போலீஸார், தீயணைப்பு படையினர் ஆகியோருடன் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படை வீரர்களும் களமிறங்கி தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
2-ம் நாளாக நேற்றும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்றன. அப்போது, மண்ணில் புதைந்து உயிரிழந்த நிலையில் ஏராளமான சடலங்கள் மீட்கப்பட்டன. இரவு நிலவரப்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது.
மீட்பு பணி குறித்து ராணுவ பிரிகேடியர் அர்ஜுன் சீகன் கூறியதாவது: தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவ வீரர்கள், மாநிலபோலீஸார், வனத்துறை அதிகாரிகள், தன்னார்வலர்கள் என 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை ஹெலிகாப்டர்கள், கடற்படை வீரர்களும் மீட்பு பணியில் இணைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் அனுப்பி வைத்தனர். சூரல்மலை, முண்டக்கை பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் மட்டுமே ஏராளமானோர் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை பகுதி மிகப்பெரிய அளவில் அழிவை சந்தித்துள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. அப்பகுதியில் வீடுகள் இருந்த தடயமே இல்லாமல் மண்மூடி காணப்படுகிறது. அனைத்து இடங்களும் சேற்று மண், மரங்கள், பாறைகளால் மூடப்பட்டுள்ளன. புதையுண்ட பலரை மீட்பு படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ள நிலையில், முண்டக்கை பகுதியை சேர்ந்த 225 பேரின் நிலை குறித்து தெரியவில்லை. அவர்கள் மண்ணில் புதையுண்டனரா, ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனரா என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உயிரிழந்தவர்களில் 94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உறவுகளை பறிகொடுத்தவர்கள் கதறி அழுதபடி உள்ளனர்.
பலர் மாயமான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. முண்டக்கை பகுதியில் 500-க்கும்மேற்பட்ட வீடுகள் இருந்த நிலையில், தற்போது 50 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடரும் மழையின் அச்சுறுத்தல்: வயநாடு, மலப்புரம், பத்தனம்திட்டா, இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர்,காசர்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மலை அடிவார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.