பாகிஸ்தானில் கடுமையான காற்று மாசு காரணமாக முழுமையான ஊரடங்கு அமலில் உள்ளது
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் தீவிர காற்று மாசுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முல்தான் நகரம், காற்றின் தர குறியீடு 2000ஐ தாண்டியதால் புகை மூட்டத்தில் மூழ்கி உள்ளது. இதனால், பஞ்சாபின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் மூடப்பட்டு, பல இடங்களில் கட்டாய லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
முல்தானில் காற்றில் உள்ள நுண்ணிய துகள்களின் அளவு உலக சுகாதார அமைப்பின் வரம்பை விட 189 மடங்கு அதிகமாக உள்ளது. இதனால், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. சுற்றுப்புற மாவட்டங்களிலும் புகை மூட்டம் காணப்படுவதால், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்த நிலைக்கு முக்கிய காரணம், தொழில்நுட்பம் இல்லாத செங்கல் சூளைகள், குப்பை எரிப்பு மற்றும் கழிவு பொருட்களை எரிப்பது ஆகியவையே. இதனால், அரசு இவற்றை தடை செய்துள்ளது.
லாகூரிலும் காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக உள்ளது. இதனால், லாகூர் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.