டிரம்பின் வெற்றி: மஸ்க்கின் தாக்கம்?
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவரது வெற்றியில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் ஈலோன் மஸ்க்கின் தாக்கம் குறித்த பேச்சுக்கள் எழுந்துள்ளன. டிரம்பிற்கு தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்து வந்த மஸ்க், அவரது வெற்றியில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், மஸ்க் டிரம்புடன் ஃப்ளோரிடாவில் உள்ள மார்-எ-லாகோவில் இருந்தார். டிரம்பின் வெற்றி உறுதியானதும், தனது எக்ஸ் பக்கத்தில் ‘அமெரிக்க மக்கள் மாற்றத்திற்கான ஒரு தெளிவான முடிவை டிரம்புக்கு வழங்கியுள்ளனர்’ என்று பதிவிட்டார்.
பின்னர், பாம் பீச் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற தனது வெற்றி உரையில், டிரம்ப் மஸ்க்கைப் புகழ்ந்து பேசினார். குறிப்பாக, மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) தயாரித்த ராக்கெட் வெற்றிகரமாக தரையிறங்கிய சம்பவத்தை மேற்கோள் காட்டி, அமெரிக்காவின் விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு மஸ்க்கைப் பாராட்டினார்.