மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்: ரஷ்யா – உக்ரைன் போர் மேலும் தீவிரம்
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மீது ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, சமீபத்திய நாட்களில் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ரஷ்யா, தனது நாட்டின் ஆறு பிராந்தியங்களில் உக்ரைனிலிருந்து வந்த 84 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது. இதில் மாஸ்கோ நகரை நோக்கி வந்த ட்ரோன்களும் அடங்கும்.இதனால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் மூன்று முக்கிய விமான நிலையங்களில் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.
மறுபுறம், உக்ரைன் விமானப்படை, ரஷ்யா சனிக்கிழமை இரவு தங்களது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 145 ட்ரோன்களை ஏவியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த ட்ரோன் தாக்குதல்கள், ரஷ்யா-உக்ரைன் போரை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ளது. மேலும், இந்த போர் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இரு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.