சென்னையில் கனமழை: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதியின் காரணமாக சென்னையில் கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. மடிப்பாக்கம் பகுதியில் 6.6 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழையால் சில இடங்களில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்பை ஆய்வு செய்ய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், கனமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், மழை பாதிப்பு குறித்த புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.