முக்கிய செய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு : காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பில் எவ்வித குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் மதிப்பீடு செய்யப்பட்டதன் பின்னரே, அவருக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை 60ஆக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகள் உள்ளிட்ட சிரேஷ்ட தரப்பினருக்கான பாதுகாப்பு தொடர்பில் அவ்வப்போது ஆராயப்பட்டு அவர்களுக்காக ஒதுக்கப்படும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பாதுகாப்புப் பணி…


இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை உத்தியோகத்தர்களின் வருடாந்த செலவு 1,100 மில்லியன் ரூபாவாகும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மகிந்தவின் பாதுகாப்பு : காவல்துறையினர் வெளியிட்டுள்ள தகவல் | 116 Security Ex President Mahinda Rajapaksa

அதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக வருடாந்தம் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

24,000 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், இதற்கு முன்னர் சிரேஷ்ட தரப்பினருக்கான பாதுகாப்பு பிரிவுகளில் பணியாற்றிய 2,000 காவல்துறை உத்தியோகத்தர்கள் தற்போது பொது கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காகக் கடமையாற்றியிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நேற்று தங்களது கடமைகளை நிறைவு செய்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button