மன்னார் வைத்தியசாலையில் தாய் – சேய் மரணம் : தொடரும் விசாரணை
மன்னார் பொது வைத்தியசாலையில் (District General Hospital Mannar) மகப்பேற்று சிகிச்சையின் போது மரணமடைந்த தாய் மற்றும் சிசுவின் மரணம் தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று (17) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது இறந்த பெண்ணின் கணவரிடம் மரணம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் அவருடைய சாட்சியம் பதிவு செய்யப்பட்டு அவற்றை நெறிப்படுத்தப்பட்டது.
அதேநேரம் சம்பவத்தின் போது கடமையில் இருந்த இரு தாதிய உத்தியோகத்தர்களையும் விசாரித்து அவர்களின் சாட்சியங்களையும் நெறிப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
முறையான விசாரணை….
மேலும் இறந்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப் பெறாமையினால் குறித்த அறிக்கையை விரைந்து பெறுவதற்கான நினைவூட்டல் கடிதத்தை அனுப்பி உடற்கூற்று பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு மரணித் தாயின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி செல்வராஜ் டினேசன் கோரிக்கை விடுத்தார்.
மன்னார் வைத்தியசாலையில் தாய் – சேய் மரணம் : தொடரும் விசாரணை | Mother And Child Death At Mannar Hospital Case
இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை மேலதிக நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் 20ம் திகதி தவணையிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மன்னார் பொது வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பிரசவத்தின் போது மரணித்த தாய் மற்றும் சிசு தொடர்பில் முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது