இலங்கை

தமிழரசு கட்சியில் இளைஞர்களை சேர்ப்பேன்: ஸ்ரீதரன் அறிக்கை!

இலங்கைத் தமிழரசுக் கட்சி
தலைவர் தெரிவுக்கான தேர்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

அன்புக்குரிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களே!!

தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையென்பது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதையும், தமிழர் தேசத்தைத் தாங்கும் தூண்களாக உள்ள நிலம், மொழி, பொருளாதாரம், கலாசாரம் என்பவையும் அழிக்கப்படுவதே. இலங்கைத்தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டும் உரியது என சிங்கள மக்கள் கருதுவதாலேயே இவ் அழிப்பு இடம்பெறுகிறது. சிங்கள – பௌத்த சித்தாந்தமும், ஒற்றையாட்சிக் கட்டமைப்பும் அதற்கான அரச இயந்திரமும், இவ்வழிப்பு நடவடிக்கைகளில் பங்காற்றுகின்றன. இந்நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இவ்வழிப்பிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். இதற்கு கோட்பாட்டு அடிப்படையில் தேசம், இறைமை, சுயநிர்ணயம் என்பன ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.

அரசியல் யாப்பு ரீதியாக வடக்கு – கிழக்கு இணைப்பு, சுயாட்சி அதிகாரங்கள், மத்திய அரசில் ஒரு தேசமாக பங்குபற்றுவதற்கான பொறிமுறை, அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பன ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இது தொடர்பாக சிங்கள தேசத்திற்கும் தமிழ்த் தேசத்திற்கும் இடையே சமூக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட வேண்டும். அதனடிப்படையில் கீழ்வரும் இலக்குகளை நோக்கியதாகவே எனது பயணம் அமையும் என்பதை தங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

தேசிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புதல்.

புவிசார் அரசியலில் பங்காளிகளாகுதல்.

சமூகமாற்ற அரசியலை முன்னெடுத்தல்.

அடிப்படைச் சக்திகள், சேமிப்புச் சக்திகள், நட்புச் சக்திகளை அணிதிரட்டுதல்.
அடிப்படைச் சக்திகள் – தாயக மக்களும் அதன் நீட்சியாகவுள்ள புலம்பெயர் உறவுகளும்.

சேமிப்புச் சக்திகள் – மலையக மக்கள், தமிழக மக்கள் உட்பட உலகவாழ் தமிழ் மக்கள்.

நட்புச் சக்திகள் – சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் உட்பட உலகம் வாழ் முற்போக்கு ஜனநாயகச் சக்திகள்.

மக்கள் பங்கேற்பு அரசியலை வலுப்படுத்தல்.

சர்வதேச சமூகத்தை எமக்குச் சார்பாகத் திரட்டுதல்.

ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கு சர்வதேசப் பாதுகாப்புடன் கூடிய இடைக்கால நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்தல்.

தமிழ் மக்களுக்கென அதிகாரமையம் ஒன்றைக் கட்டியெழுப்புதல்.

கிழக்கைப் பாதுகாப்பதற்கு தனியான வேலைத்திட்டத்தை முன்னெடுத்தல்.

மீன்பிடி, விவசாயம், வணிகம், கைத்தொழில், அரசு, நிர்வாகம், கல்வி போன்ற துறைகளுக்கு துறைசார் நிபுணர்கள், அனுபவசாலிகள், ஆற்றலாளர்களை உள்ளடக்கிய சிந்தனை வங்கிகளை உருவாக்கி சூழலுக்கேற்ற தீர்மானங்களை நிறைவேற்றுதலும் செயற்படுத்துதலும்.

பலமுனைகளிலும், கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் வடக்கு, கிழக்;கு தமிழர் தாயகப் பகுதிகளில் இன, மத, கலாசார, பண்பாட்டு ரீதியாக வலிந்து மேற்கொள்ளப்படும் சகல ஆக்கிரமிப்புகளையும் – துறைசார் அடக்குமுறைகளையும் பதிவுசெய்து, உடனடி எதிர்ப்புப் பொறிமுறைகளைக் கையாளக்கூடிய ‘மக்கள் குறைகேள் சர்வதேச கண்காணிப்பு மையங்களை’ வடக்கிலும் கிழக்கிலும் தனித்தனியே நிறுவுதல்.

தமிழினத்தின் கலாசார, பண்பாட்டு மரபுரிமைகளையும், அடையாளங்களையும் நிபுணத்துவ பங்குபற்றலுடன் நிறுவி, நெறிப்படுத்தல்.

ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் உள்ள சமூக அமைப்புகளின் தாயகம் நோக்கிய செயற்பாடுகளுக்கு வழிவகை செய்தல்.

கட்சியின் நிருவாகக் கட்டமைப்பு சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்கள்.

தொண்டரிலிருந்து தலைமை வரை கட்டிறுக்கமான நிருவாக நடைமுறைகளையும், உட்கட்சி சனநாயகத்தையும் வலுவுள்ளதாக்கும் வகையில் கட்சியின் யாப்பு விதிகளை நேர்த்தியாக்குதல்.

கட்சியின் இலக்குக் குறித்த தெளிவும் வினைத்திறனும் மிக்க நவீன ஊடகப்பரப்பைக் கட்டமைத்தல்.

கட்சியின் தலைமைப் பணிமனை, மாவட்டப் பணிமனை என்பவற்றை முறையான கட்டமைப்புகளுடன் இயங்கு நிலையில் வைத்திருத்தல்.

கட்சிக்கான சட்டரீதியான நிதியீட்டங்களை உறுதிப்படுத்தலும் கையாளலும்.

தமிழ்த்தேசியக் கொள்கை நிலைப்பாட்டோடு இயங்கும் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கொள்கைவழிப்பட்ட அரசியல் உறவுநிலையைப் பேணுதல். மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளித்தல்.

அரசுடனும் ஏனைய அமைப்புக்களுடனுமான பேச்சுவார்த்தைகளின் போது வெளிப்படைத் தன்மையைப் பேணுதல்.

கட்சியின் நிருவாகக் கட்டமைப்பில் இளையோர்களை உட்சேர்த்தல்.

முன்னாள் போராளிகளினுடைய அரசியல் மற்றும் தேசக்கட்டுமான அனுபவங்களை உள்வாங்கி, கட்சியின் நகர்வுகளில் அவர்களின் பங்கேற்பினையும் உறுதிப்படுத்துதல்.

எதிர்காலத்தில் தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளும் ஒவ்வொரு தேர்தல்களிலும் தனிநபர்களின் சுயவிருப்புக்கேற்ப வேட்பாளர்களை நியமிக்காது, பொருத்தமான வேட்பாளர்களை நிறுத்துவதற்காக வெளிப்படையாகச் செயற்படல்.

நிலத்திலும், புலத்திலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் இலக்குகளையும் அடைவதற்கான பொது வேலைத்திட்டத்திற்குரிய பொறிமுறையை உருவாக்கி நடைமுறைப்படுத்தல்.

இவ்வாறு குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button