யாழில் காதலர் தினத்தில் மனைவிக்கு பரிசளிக்க 29 பவுண் நகை திருட்டு: பொலிஸார் அதிரடி!
யாழில் காதலர் தினத்தில் மனைவிக்கு பரிசளிக்க 29 பவுண் நகையை திருடிய நபர் உள்ளிட்ட இருவர் கைது!
காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் தங்க நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான இளம் குடும்பஸ்தரும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே இவ்வாறு காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள முதியவரின் வீட்டில் 29 பவுண் நகைகள் திருடப்பட்டது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்றையதினம் யாழ்ப்பாண நகரில் திருடிய நகைகளில் 4 பவுண் நகைகளை அடகு வைக்க சென்றபோது பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பிரதான சந்தேக நபர் 25 பவுண் தாலியுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.