ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச..! மொட்டுக் கட்சி உத்தியோகபூர்வ அறிவிப்பு
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு இன்று காலை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நாமல் ராஜபக்சவின் பெயரை அறிவிப்பதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தம்மிக்க பெரேராவை வேட்பாளராக களமிறக்க அக்கட்சி தீர்மானித்திருந்த நிலையில் அவர் தேர்தலில் போட்டியிட பின்வாங்கியுள்ளதால் நாமல் ராஜபக்சவை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அக்கட்சியின் செயலாளர் நாயகம் சாகர காரியவசத்திற்கு இன்று (06) எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில், “எதிர்வரும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நான் என்னை முன்னிறுத்தப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேட்புமனுவில் இருந்து நான் விலக வேண்டிய தனிப்பட்ட காரணங்களை கவனமாக பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமை மற்றும் உறுப்பினர்கள் என்மீது காட்டிய நம்பிக்கையையும் ஆதரவையும் நான் பாராட்டுகிறேன்.
என்னால் முடிந்த அளவு கட்சியை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறேன்” என மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு இன்று (07) வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.