இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

பாராளுமன்றத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவில் நிறைவு – அமைதி காலம் அமுல்

பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அதன்படி, இன்று நள்ளிரவு முதல் தேர்தல் நாள் வரை அமைதி காலம் அமுலில் இருக்கும் எனவும், அக்காலப்பகுதியில் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இருப்பினும், வேட்பாளர்கள் அமைத்துள்ள தேர்தல் அலுவலகங்களை அகற்றுவதற்கு நாளை (12) நள்ளிரவு வரை கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தேர்தல் கண்காணிப்பில் பங்கேற்கும் ஆசிய நாடுகளின் தேர்தல் ஆணைக்குழுக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. மேலும், ஐரோப்பிய அமைப்புகள் மற்றும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே நாட்டுக்கு வந்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளின் இறுதி பிரச்சார கூட்டங்கள் இன்று மாலை நடைபெறவுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரமாண்ட பேரணி இன்று மாலை கம்பஹா மாநகர சபை மைதானத்திலும், பிலியந்தலை சோமவீர சந்திரசிறி விளையாட்டரங்கிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கின் தலைமையில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி மாபெரும் பேரணி சஜித் பிரேமதாசின் தலைமையில் கொழும்பு அளுத்கடை சந்தியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இறுதிப் பேரணி, நாமல் ராஜபக்ஷின் தலைமையில் தங்காலை கார்ல்டன் வீடமைப்புத் தொகுதியில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இதோடு, சர்வஜன அதிகாரத்தின் இறுதி மக்கள் பேரணி இன்று மாலை 4.00 மணிக்கு மஹரகமவில், அக்கட்சின் தலைவர் திலித் ஜயவீரின் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button