இலங்கைமுக்கிய செய்திகள்

நாடாளாவிய ரீதியில் உயர்தரப் பரீட்சை ஆரம்பம்…

க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பித்துள்ளது.

அந்தவகையில் வவுனியா (Vavuniya) மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு இன்றையதினம் பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.

இம்முறை உயர்தரபரீட்சைக்கு வவுனியாவில் 2420 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளதுடன் அவர்களுக்காக 20 பரீட்சைமத்தியநிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 9 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து கடும்மழை பெய்து வருகின்றது.

இதனால் பரீட்சை நிலையத்திற்கு வருகின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலையகத்திலும் மலையக மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக்கூடியதை எம்மால் அவதானிக்க முடிந்திருந்தது.

அந்தவகையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவா்கள் ஆா்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு சென்றமை காணக்கூடியதாக இருந்தது.

அத்தோடு காவல்துறையினரின் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றையதினம் (25.11.2024) ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்காக 2,312 பரீட்சை நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன

இம்முறை பரீட்சைக்கு 333,183 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 253,390 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆவதுடன் 79,795 பேர் தனியார் பரீட்சார்த்திகள் ஆவர்.

பரீட்சைகள் காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பரீட்சார்த்தியின் கையொப்பத்தை தகுதியான ஒருவரால் சரிபார்க்க வேண்டியது அவசியமானது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button