புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அரசாங்கத்தின் இறுதி முடிவு
புலமைப்பரிசில் பரீட்சை (Grade 5 Scholarship exam) தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் (Ministry of Education) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை வினாத்தாளில் கேள்விகள் கசிந்தமை தொடர்பில் ஆராய்ந்த மூன்று குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த குழுக்களின் அறிக்கையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை சட்டமா அதிபர் மேற்கொள்வார் என அமைச்சு மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.
செப்டம்பர் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீடு மற்றும் முடிவுகளை வெளியிடுவதை நிறுத்தி வைத்து நவம்பர் 18ஆம் திகதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை (scholarship exam) நிறுத்தபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மக்கள் பலர் ஆதரவான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில், லங்காசிறி ஊடகம் முன்னெடுத்த கருத்து கணிப்பிலேயே இவ்வாறு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த புலமைப்பரிசில் பரீட்சையானது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்துவதாக அமைந்தாலும் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாக பெற்றோர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சையானது தரம் 5 இல் அவசியமற்ற ஒன்று என்றும் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.