உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தக்கூடிய திகதிகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L.Rathnayake) தலைமையில் நேற்றையதினம் (27.11.2024) கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.
இதன்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் திகதி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பரீட்சை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அந்தத் திகதியை பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்துவதற்கான குறிப்பிட்ட திகதி தீர்மானிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதால், ஆணைக்குழு அதற்கு தயாராகி வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.