சீனத் தூதுவருக்கும், சபாநாயகருக்கும் இடையில் கலந்துரையாடல்.
இலங்கை – சீன சட்டவாக்க நிறுவனங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் புதிய பாராளுமன்றத்திலும் இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக சீன தூதுவர் சபாநாயகர் அசோக ரன்வலவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்கிற்கும், சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வலவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
சீன தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழுவின் தலைவர் (சீன பாராளுமன்ற சபாநாயகர் ஸாவோ லெஜியின் வாழ்த்துக்களை சீன தூதுவர் சபாநாயகரிடம் தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்ட கால ஒத்துழைப்புக்களை நினைவு கூர்ந்த புதிய சபாநாயகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையிலான புதிய அரசாங்கத்திலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த சீனத் தூதுவர் இரு நாடுகளின் சட்டவாக்க நிறுவங்களின் உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும், புதிய பாராளுமன்றத்திலும் இலங்கை – சீன பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
அத்துடன், பொருளாதார அவிபிருத்தி, கலப்பின விதை வகைகளை விருத்தி செய்தல் உள்ளிட்ட விவசாயம் சம்பந்தப்பட்ட விடயங்கள் நீர் முகாமைத்துவம், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதி துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.