காசாவில் போர் புரிய மறுத்த இஸ்ரேல் நாட்டு இராணுவம்.
இஸ்ரேல் (Israel) நாட்டு இராணுவம் காசாவில் (Gaza) போர் புரிய மறுப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹமாஸ் (Hamas) அமைப்புக்கும் இஸ்ரேல் இராணுத்திற்கும் இடையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக போர் நடத்தி வர இந்த ஹமாஸ் அமைப்பினரை இஸ்ரேல் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி உள்ளன.
இதற்கு ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே காலம் காலமாக நடந்து வரும் மோதல் தான் காரணமாகும்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலுக்குள் நுழைந்து அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதில் மொத்தம் 1,200 இஸ்ரேலியர்கள் பலியாகினர். பலஸ்தீனத்தின் காசா மீது வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது.
இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது. தற்போது வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகி உள்ளனர் இந்த போரை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று இஸ்ரேலுக்கு பல நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால் இஸ்ரேல் அதனை கேட்காமல் போரை தொடர்ந்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் காசாவில் போர் புரிய இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மறுத்து வருவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி உள்ளன.
காசாவில் ஹமாசுக்கு எதிரான போர் என்பது இப்போதைக்கு முடியாது என்பதால் இஸ்ரேல் வீரர்கள் சோர்வடைந்து போரிட மறுப்பதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பில் அமெரிக்காவில் உள்ள அச்ச ஊடகம் ஒன்று “காசா மீதான தொடர் போரால் இஸ்ரேல் வீரர்கள் சோர்வடைந்துள்ளனர். இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்வதால் அவர்கள் நீண்டகால போரை விரும்பவில்லை” என செய்தி வெளியிட்டுள்ளது.
பல வீரர்கள் மனநலம் மற்றும் உளவியல் ஆலோசனைகளை கேட்பதாகவும், சிலர் மனஉளைச்சல் தாங்க முடியாமல் தற்கொலை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் போரை தொடர வேண்டும் என்றால் கூடுதலாக படை வீரர்கள் வேண்டும். ஆனால் தற்போது இஸ்ரேல் நாட்டு படை வீரர்கள் போரிட தயக்கம் காட்டி வருகினறமை குறிப்பிடத்தக்கது.