2024 இல் அதிகளவான சுற்றுலா பயணிகள்- சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை
2024 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,776,889 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்தியா, பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை உயர்வடைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் சுற்றுலா பயணிகளின் வருகை உயர்வடைந்துள்ளது.
2023ஆம் ஆண்டு 1,487,303 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 1,776,889 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை வருகை தந்துள்ளனர்.
இக்காலப்பகுதியில் இந்தியா, பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து 322,973 சுற்றுலா பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 146,670 சுற்றுலா பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 137,599 சுற்றுலா பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 108, 788 சுற்றுலா பயணிகளும், சீனாவில் இருந்து 105,574 சுற்றுலா பயணிகளும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டு 40 இலட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஊடாக அடுத்த ஆண்டு 8 பில்லியன் டொலர் வருமானத்தை திரட்டிக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை அண்மைக்காலமாக சீரான நிலையில் காணப்படுகிறது. 2018 ஆண்டு இலங்கைக்கு 2.3 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகைத் தந்தனர்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம், கொவிட் பெருந்தொற்று தாக்கம், 2022 காலப்பகுதியில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு உள்ளிட்ட காரணிகளால் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது. தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் சுற்றுலாத்துறை மீண்டும் அபிவிருத்தியடைந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.