இந்தியாவில் பல சிறப்பம்சங்களுடன் இன்று திறக்கப்படுகிறது இராமர் கோயில்..
பல சட்ட போராட்டங்களுக்கு பின்னர் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் கடந்த 2019ஆம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. நித்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இக்கோயில் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.
காலை 10 மணிக்கு மங்கல இசையுடன் விழா ஆரம்பமாகி நாடு முழுவதும் இருந்து வருகை தந்துள்ள பிரபல கலைஞர்கள் பங்கேற்று தமிழக பாரம்பரிய இசைக் கருவிகளான தவில், நாதஸ்வரம், மிருதங்கம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிககளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை இசைக்க உள்ளனர்.
ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி காலை 10.30 மணிக்கு வருகிறார். 7,000-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் 11 மணி அளவில் வருகின்றனர். கோயில் கருவறையில் சிறப்பு பூஜைகள் காலை 11.30 மணிக்கு தொடங்கும். 12.05 முதல் 12.55 மணிக்குள் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் மத்தியில் பிரதமர்மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றுகின்றனர். குழந்தை ராமரை வழிபட பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
கோயில் உட்பட அயோத்தி நகரம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோயில் கருவறை தங்கத்தில் செய்யப்பட்ட மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இவ் விழாவை ஒட்டி இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள சில இந்து ஆலயங்களிலும் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.