ராடான் மீடியா ராதிகா சரத்குமார் தயாரிப்பிலும் நடிப்பிலும் உருவாகி வருகிறது தாயம்மா நெடுந்தொடர்.
இந்த தொடரை விக்ரம் ஆதித்யா இயக்கியுள்ளார்.
ராதிகா சரத்குமார் மிக நீண்ட இடைவெளிக்கு பின் நடித்துள்ள இத்தொடருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ராடன் நிறுவனம் தயாரிப்பில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஜமீலா நெடுந்தொடரில் ரிஸ்வான் இசையில் மூன்று பாடல்களை பொத்துவில் அஸ்மின் எழுதியிருந்தார், குறித்த
மூன்று பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நன்கு வரவேற்பு பெற்றன.
அதன்பின்னர் ராடன் நிறுவன தயாரிப்பில் அவர் பாடல் எழுதிய இரண்டாவது நெடுந்தொடர் தாயம்மா.
ராதிகா சரத்குமாரின் சித்தி நெடுந்தொடருக்கு தினா இசையில் மறைந்த இலங்கை முஸ்லிம்களின் மாபெரும் தலைவர், கலாநிதி மர்ஹூம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் விருட்சமுனி எனும் பெயரில் ஒரு பாடலை எழுதியிருந்தார்.
வானத்தை நோக்கி ஒரு வண்ணத்து பூச்சி பறந்திட முனைந்ததுவே, என ஆரம்பிக்கும் பாடலை பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியிருந்தார்.
இத்தொடர் 1999 முதல் 2001 வரை சண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
2000/9/16 ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் அமைச்சர், தலைவர் அஸ்ரப் அகால மரணமானார். (இப்போது அவர் எழுதிய பாடல் வரிகளை படித்துப்பாருங்கள்.)
இந்த நிலையில் அஸ்மின் அவர்கள் இது தொடர்பில் கூறுகையில் நான் பொத்துவில் மத்திய கல்லூரியில் உயர்தரம் படிக்கும் காலகட்டத்தில் அவர் மறைவை முன்னிட்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற கவிதைப்போட்டியில் அரசியல் வானில் அஸ்ரப் எனும் விடிவெள்ளி எனும் தலைப்பில் நான் எழுதிய கவிதை முதலிடம் பெற்று அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கரங்களால் விருது பெற்ற போதே என் இலக்கிய வாழ்க்கை முறைப்படி அங்கீகாரத்தோடு தொடங்கிவைக்கப்பட்டது.
நான் வாழ்க்கையில் பெற்ற முதல் விருது, முதல் பரிசு அவருக்காக எழுதப்பட்ட கவிதைக்கு கிடைத்ததென்றால், தென்கிழக்கின் பொன்விளக்கு என்றபெயரில் நான் எழுதிய முதல் பாடலும் அவருக்காக எழுதுப்பட்டதே.
2001 மற்றும் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த எனது கவிதை நூல்கள் விடைதேடும் வினாக்கள்”, “விடியலின் ராகங்கள்” ஆகியவற்றை தலைவர் அஸ்ரப் அவர்களுக்கே நன்றியுடன் சமர்ப்பணம் செய்திருந்தேன்.
25 ஆண்டுகளுக்குப்பிறகு ஒரு இலங்கை கவிஞனாய் அவர் பாடல் எழுதிய ராதிகா சரத்குமார் அவர்களுக்கு நான் பாடல் எழுதுகின்றேன் என்பதை நினைத்துப்பார்த்தால் மனம் பூரிப்படைகின்றது.
இத்தொடரின் தலைப்பு பாடலினை இசையமைப்பாளர் C.சத்யா இசையில் நான் எழுதியுள்ளேன்.
அவரோடு இணைந்து பணிபுரியும் முதல் தருணம் இதுவாகும்.
“எங்கேயும் எப்போதும்”, “நெடுஞ்சாலை”, “தீயா வேலை செய்யனும் குமாரு”, “காஞ்சனா-02”, “அரண்மனை-03”, “ராங்கி”, “நாடு” போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கும் இவர் “கனா காணும் காலங்கள்”, “ரேகா IPS”, “வாணிராணி”, “லக்ஸ்மி ஸ்டோர்ஸ்”, “சரவணன் மீனாட்சி” போன்ற பல நெடுந்தொடர்களுக்கும் இசையமைத்துள்ளார்.
தாயம்மா பாடல் மிகவும் அருமையாக உருவாகி இருக்கிறது.
இப்பாடல் என் பாடல் பணியில் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்புகின்றேன்.
இந்த தருணத்தில் மூத்த கலைஞர் ராதிகா சரத்குமார் அவர்கள், ராடன் நிறுவன மேலாளர் சுபாவெங்கட், திரைப்பட இயக்குனர் “திருமணம் எனும் நிக்காஹ்” புகழ் அனீஸ், இசையமைப்பாளர் C.சத்யா ஆகியோருக்கும் என் வாழ்நாள் நன்றிகள் என இலங்கையை சேர்ந்த தென்னிந்திய பாடலாசிரியர்கள் பொத்துவில் அஸ்மின் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.