இலங்கைவிளையாட்டு

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற வன்னி உதைபந்தாட்ட சமர்!

தாயக விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் “வன்னி உதைபந்தாட்ட சமர்” எனும் உதைபந்தாட்ட போட்டியின் ஏழாவது போட்டி வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் வவுனியாவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 24 விளையாட்டு கழகங்கள் பங்குபற்றிய இந்த போட்டித் தொடர் தொடர்ந்து மூன்று நாட்களாக இடம்பெற்ற குறித்த போட்டியின் இறுதிப்போட்டி இன்று 27-01-2024 ( சனிக்கிழமை ) மாலை 9.30 ற்கு ஆரம்பமாகி வவுனியா மாநகர சபை மைதானத்தில் மின் ஒளியில் இடம்பெற்றது.

இறுதிப் போட்டியில் முல்லைத்தீவு சென்.யூட்ஸ் விளையாட்டு கழகமும் கிளிநொச்சி, வட்டக்கச்சி லக்கி ஸ்ரார் விளையாட்டுக் கழகமும் மோதிய நிலையில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலை போட்டு சம நிலையில் போட்டி நிறைவடைந்த காரணத்தினால் தண்ட உதையின் மூலம் முல்லைத்தீவு சென்.யூட்ஸ் அணி வெற்றி பெற்று வெற்றிக் கிண்ணத்தையும் 75000 ரூபா பணப் பரிசினையும் தட்டிச் சென்றது.

தாயக விருட்சத்தின் இணைப்பாளர் செல். ஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இறுதி நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், இந்து பௌத்த சங்கத்தின் தலைவர் ம.மயூரதன், வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவருமான அ.நாகராஜன் , கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன் அவர்களும் வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் ஆலோசகரும் ஆதித்ரா குழுமத்தின் தலைவருமான ந.ஜனகதீபன் (ஜனகன் நடராசா) அவர்களும் வவுனியா ஊடாக அமையத்தின் செயலாளர் ப.கார்த்தீபன் , வடமாகாண துடுப்பாட்ட சங்க தலைவர் யோ.ரதீபன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button