Uncategorizedஇலங்கைமுக்கிய செய்திகள்

கட்சியை விட்டு போவதெனிலும் போகலாம்: சுமந்திரன் அணியை நேரில் எச்சரித்த சிறீதரன்!

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு திட்டமிட்டபடி நேற்றையதினம் திருகோணமலையில் ஆரம்பமாகியதுடன் செயற்குழு பொதுக்குழு கூட்டங்களும் இடம்பெற்ற நிலையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று காலையில் மத்தியகுழு கூட்டம் நடந்த போது, கூட்டத்தின் ஆரம்பத்தில், மட்டக்களப்பு முன்னாள் எம்.பி பா.அரியநேத்திரன் எழுந்து, ஞா.சிறிநேசனை செயலாளர் பதவிக்கு முன்மொழிந்தார், இதையடுத்து, குகதாசன் எழுந்து- தான் இம்முறை செயலாளர் பதவிக்கு போட்டியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில் சுமந்திரன் எழுந்து தலைமை பதவிக்கு போட்டியிட்ட சிறீதரன் தலைவராகி விட்டார், அதில் தோல்வியடைந்த நான் செயலாளராக வருவதே பொருத்தம், அப்படியானாலே இரண்டு அணிகளும் சமபலமாக இருக்கும் என்றார்.

இதையடுத்து, வடக்கை சேர்ந்தவரே தலைவர், அதே பகுதியை சேர்ந்தவரே செயலாளராக நியமிக்கப்பட முடியாது என எதிர்ப்பு வந்தது.

உடனே எழுந்த நாடாளுமன்ற உறுப்பினரான சுமந்திரன், அம்பாறை மாவட்ட தலைவர் த.கலையரசன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சாணக்கியன், திருமலை மாவட்ட தலைவர் குகதாசன் ஆகியவர்களில் ஒருவர் செயலாளரானால், தான் போட்டியிலிருந்து விலகுவதாக கூறினார்.

இதை தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன்- சுமந்திரனுக்கு இடையில் தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இதன்போது, குகதாசனுக்கு செயலாளர் பதவியை வழங்கலாமென இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்தனர்.

அத்துடன், ஏனைய பதவிகள் குறித்தும் சிலரால் இணக்கப்பாடு எட்டப்பட்டது, 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந்த முடிவு மத்தியகுழு கூட்டத்தில் வெளியிட்ட போது, அதற்கு எதிர்ப்பு கிளம்பியது, இந்த முடிவை பொதுக்குழு ஏற்றுக்கொண்டால் மாத்திரமே திருகோணமலை சேர்ந்த குகதாசன் செயலாளராக அங்கீகரிக்கப்படலாம் என தீர்மானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, பொதுக்குழு கூட்டம் நடந்தது.

இதன்போது, குறித்த பதவிகள் விபரம் முன்மொழியப்பட்டபோது, கூட்டத்தில் எதிர்ப்பு கிளம்பியது. நீங்களே இப்படி தீர்மானிப்பதெனில் எதற்கு பொதுச்சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என எகிறினர்.

இதன்போது, சுமந்திரன் கூட்டத்தை சமாளிக்க முயன்றார்.

இருந்த போதிலும் குழப்பம் தொடர்ந்தது, சிரேஸ்ட உப தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்காக வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென ஒரு சாரர் வலியுறுத்தினர்.

இதை தொடர்ந்து, நீண்ட இழுபறியின் பின்னர், செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பை இன்றையதினம் (28) நடத்தலாம் என தலைவர் மாவை அறிவித்தார். இதை தொடர்ந்து கூட்டத்திலிருந்து பலர் எழுந்து செல்லத் தொடங்கினர்.

இந்த சமயத்தில் எம்.ஏ.சுமந்திரன் திடீரென எழுந்து வந்து, தானே பதில் செயலாளர் என குறிப்பிட்டு, குகதாசனை செயலாளராக நியமிக்கலாமென்ற மத்தியகுழுவின் பரிந்துரையை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள், ஆதரிப்பவர்கள் கையை உயர்த்தலாம் என கூறினார்.

அந்த பரிந்துரைக்கு ஆதரவாக 112 பேர் கையை உயர்த்தினர்,
எத்தனை பேர் எதிர்க்கிறீர்கள் என சுமந்திரன் கேட்ட போது104 பேர் கையை உயர்த்தினர்.

இந்த நிலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பொதுக்குழுவில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் 341 பேர் என்றும், வாக்களிப்பு இன்று என அறிவிக்கப்பட்டதால் நூறுக்கும் மேற்பட்டவர்கள் எழுந்து வெளியில் சென்று விட்டார்கள் என்றும் ஒரு சாரர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குகதாசனை ஆதரித்து கையை உயர்த்தியவர்களில், அவர் அழைத்து வந்த பணியாளர்கள், வாகன சாரதிகளும் உள்ளடங்குவதாகவும், அவர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் இல்லையென்றும், சுமந்திரனின் நடவடிக்கை கேலிக்கூத்தானது என்றும் விமர்சித்தனர்.

இந்த பின்னணியில், இன்று நடக்கவிருந்த கட்சியின் தேசிய மாநாட்டை ஒத்திவைப்பதாகவும், கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான தெரிவையும் ஒத்திவைப்பதாக தலைவர்கள் மாவை அறிவித்து கூட்டத்தை ஒத்திவைத்தார்.

விரைவில் மத்தியகுழு கூட்டத்தை நடத்தி, மாநாட்டு திகதியை தீர்மானிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தின் பின்னரும், வெளியில் சூடான நிலைமை காணப்பட்டது. சுமந்திரன் அணியில் இணைந்துள்ள பீற்றர் இளம்செழியன் போன்ற இளையவர்கள் செயலாளர் தெரிவு செய்யப்பட்டு விட்டார், அதை நிராகரிக்கும் கட்சியின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டுமென சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்தில் எம்.ஏ.சுமந்திரனும் நின்றார்.

அங்கு வந்த சி.சிறிதரன் இதை கேட்டு ஆத்திரமடைந்தார். “நீங்கள் யாரும் வழக்கு போடுவதெனில் போய் போடலாம், கட்சியை விட்டு போவதெனிலும் போகலாம். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை“ என கோபமாக கூறினார்.

இவ்வாறான நிலையில்தான் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையை சேர்ந்த சண்முகம் குகதாசன் தெரிவு செய்யப்பட்டதாக கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button