தமிழரசின் புதிய தலைமையும் சவால்களும்: ஆசிரியர் தலையங்கம்!
தமிழரசின் புதிய தலைமையும் சவால்களும்: இன்று வெளியான ஆதித்ரா பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்.
பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் ஒருவகையாக உட் கட்சி தேர்தல் மூலம் தமிழரசுக் கட்சிக்கு புதிய தலைமை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் மிகவும் இக்கட்டான ஒரு அரசியல் சூழலில் இந்த பதவிக்கு வந்துள்ளார்.
இது ஒரு பதவியாக நிச்சயமாக அமைய வாய்ப்பில்லை மிகவும் கடினமான ஒரு பொறுப்பாகவே அவருக்கு இந்த தலைமை பொறுப்பு அமையப் போகின்றது.
மிகவும் பலமான கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கிய தமிழரசு கட்சி தற்பொழுது தனது பங்காளி கட்சிகளை இழந்த நிலையில் தனித்து விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தொடர்ந்து வரும் தேர்தல்களில் மெல்ல மெல்ல சரிவை சந்தித்து வரும் தமிழ் தேசிய உணர்வாளர்களின் வாக்குகள் பல கூறுகளாக பிரிந்து கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பக்கமும் தமிழ் மக்கள் கூட்டணிக்கும் ( தமிழ் மக்கள் தேசிய கூட்டணி) சென்றுள்ளன.
இதன் மூலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஒரு நேரடி ஆசனமும் ஒரு தேசிய பட்டியல் ஆசனமும் அதே போன்று தமிழ் மக்கள் விடுதலை கூட்டணிக்கு ஒரு ஆசனம் கிடைத்திருக்கின்றது.
அதைவிடவும் புதிதாக உருவாகி இருக்கின்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மேலும் அதிகமான வாக்குகளை பிரிக்கக்கூடிய சக்தியாக மாறிவருகின்றது.
இந்த நிலையில் பலவீனமான நிலையில் உள்ள தமிழரசு கட்சியையே ஸ்ரீதரன் அவர்கள் பொறுப்பேற்று இருக்கின்றார் என்பதுதான் உண்மை.
அத்துடன் தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் சிறிதரன் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட சுமந்திரன் அவர்கள் சிறிதரனின் வெற்றியின் பின்னர் நாம் இணைந்து பயணிக்கலாம் என்று கூறியிருந்தாலும் கூட தேர்தலின் போது தங்களுக்குள் மோதிக்கொண்ட சுமந்திரன் ஆதரவாளர்களும் சிறிதரனின் ஆதரவாளர்களும் முழு மனதோடு எதிர்காலத்தில் இணைந்து பயணிப்பார்களா அல்லது முழு மனதுடன் பணியாற்றுவார்களா என்பதும் சந்தேகமே.
அது மட்டுமின்றி நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் பல மடங்கு அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவும் இலங்கை மக்களை குறிப்பாக தமிழ் மக்களை மிகவும் வறுமைக்கு தள்ளி உள்ளது இந்த நிலையில் இனி ஒரு தேர்தல் ஒன்று வரும்போது மக்கள் சலுகைகளை, தேவைகளை எதிர்பார்ப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
பசித்தவனிடம் கொள்கையை பேசிப் பயனில்லை என்ற நிலையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி பட்டினியில் வாழுகின்ற போது கொள்கை ரீதியான அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு சென்று முன்பு போன்று அதிக ஆசனங்களை பெற முடியுமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.
இவ்வாறான பல நடைமுறை பிரச்சனைகளுக்கு மத்தியில் கட்சியை பொறுப்பேற்றிருக்கும் புதிய தலைமை தம்மை விட்டு பிரிந்து சென்ற பங்காளி கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலை சந்திப்பதோடு கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தி மேட்டுக்குடி மனநிலையில் இருக்கும் தமிழரசு கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிலரை மாற்றம் செய்து இளைஞர்களையும் உண்மையான தமிழ் தேசிய பற்றாளர்களையும் கட்சியில் இணைத்து அனைவரையும் ஒருங்கிணைத்து சரியான திட்டமிடலின் ஊடாக பயணித்தால் மாத்திரமே சிறிதரன் அவர்களால் கட்சியை வெற்றி பாதையில் விட்டுச் செல்ல முடியும்.
தவறும் பட்சத்தில் இதுவரை இரட்டை இலக்கங்களில் பாராளுமன்ற ஆசனங்களை பெற்று வந்த இலங்கை தமிழரசு கட்சியின் வீட்டுச் சின்னம் எதிர்காலத்தில் ஒற்றை இலக்கங்களில் அல்லது ஓரிரண்டு ஆசனங்களை மாத்திரமே பெறும் நிலைக்கு தள்ளப்படலாம் இதனால் புதிய தலைமை மீது அந்தத் தோல்விக்கான பொறுப்பு சுமத்தப்படலாம் அத்துடன் சிறிதரன் அவர்கள் கட்சியை சரியாக கொண்டு செல்லவில்லை என்ற விமர்சனத்தை ஏற்க வேண்டியும் வரலாம் எனவே மிகவும் சவால்கள் நிறைந்த காலத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள சிறிதரன் சரியாகவும் அர்ப்பணிப்போடும் செயல்பட்டால் மாத்திரமே தன்னை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
நன்றி.
ஜனகன் நடராசா.