இலங்கைமுக்கிய செய்திகள்

மன்னாரில் பதற்றம்: தொடர் கொலைகள்: இன்றும் கொலை முயற்சி!

மன்னார் மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம், நொச்சிக்குளம் பகுதியில் இன்றையதினம் திங்கட்கிழமை நொச்சிக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரை இலக்குவைத்து அவரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவர் அதிஸ்ரவசமா உயிர் தப்பினார்.

இந்த நிலையில் குறித்த கிராம மக்கள் குறித்த வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

இன்றையதினம் திங்கட்கிழமை (19) காலை 8.30 மணியளவில் நொச்சிகுளத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது கிராமத்தில் உள்ள தனது வயலில் நீர் பாய்ச்சிக் கொண்டு இருந்த வேளையில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் ஒரு ரி-56 ரக துப்பாக்கி மூலம் அந்த விவசாயியை நோக்கி சுட்ட போது அவர் மயிரிழையில் உயிர் தப்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்த சில காலமாக இந்த கிராமத்து மக்களின் மீது ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தி இது வரை மூவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கிராமத்துக்கு பொலிஸ் காவல் போடப்பட்டும் அதையும் மீறி இவாறான சம்பவங்கள் தொடர்வதாகவும், இன்றைய தினம் நடைபெற்ற சம்பவத்தை கண்டித்தும் நொச்சிக்குளம் கிராம மக்கள் வீதியை மறித்து பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த பதாதைகளில் ‘கொலைகாரர்களுக்கு ஆயுதம் கொடுத்தது யார்?’ ‘எங்களை பாதுகாப்பது அரசின் கடமை’ ‘எங்கள் உயிருக்கு பாதுகாப்பு தாருங்கள்’ எங்கள் மக்களுக்கு நீதி இல்லையா? யார் தருவது’ போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் உடன் சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக மன்னார் மற்றும் உயிலங்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து இன்றையதினம் திங்கட்கிழமை காலை முதல் மன்னார் பிரதான பாலம் ஊடாக மன்னார் நகருக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும், பொலிஸாரினால் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button