நாட்டில் டெங்கு காய்ச்சலால் இதுவரை 14 பேர் உயிரிழப்பு
நாட்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 32 ஆயிரத்து 866 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சுமார் 4,506 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, நேற்று வியாழக்கிழமை முதலாம் திகதி மாத்திரம் 121 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் சடுதியாக அதிகரித்துச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது.
டெங்கு பரவலைக் கருத்திற் கொண்டு 22 சுகாதார மருத்துவ அதிகாரப் பிரிவுகள் (MOH) அதி உயர் டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு டெங்கு காய்ச்சலால் நேற்று முன்தினம் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உயர்வடைந்துள்ளது.
எதிர்வரும் தினங்களில் பதிவாகக்கூடிய டெங்கு நோயாளர்களின் வீதம் மேலும் அதிகரிக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன.
கொழும்பு, கம்பஹா, கண்டி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காணக் கூடியதாக உள்ளது.
பொதுமக்கள் டெங்கு அபாயத்தை கருத்திற் கொண்டு தாம் வாழும் சூழலில் டெங்கு நுளம்புகள் பெருக்கக்கூடிய பகுதிகளை இனங்கண்டு அவற்றை இல்லாதொழித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.