இலங்கையில் தோன்றிய அன்னை மரியாள்: பொலிஸார் மூலம் வெளிவந்த உண்மை!
இன்றைய சமூக வலைதளங்களின் உலகத்தில் பல்வேறு மதங்களின் அடையாளப் பாத்திரங்கள் குறித்தும், அவர்களை உயிருடன் பார்க்கும் வாய்ப்புகள் குறித்தும் அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் தென்னிலங்கையில் நடந்த இதுபோன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கத்தோலிக்க மதத்தின் பிரதான பாத்திரமான இயேசுவின் தாயாக கருதப்படும் ‘அன்னை மரியாள்’ உருவத்தை ஒத்த உருவம் கொண்ட பெண் ஒருவர் கந்தானை பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் காணொளி ஒன்று வெளியானதே இதற்கு காரணம்.
அடையாள விபரங்களை வெளிப்படுத்திய காவல்துறையினர்.
கத்தோலிக்கர்கள் வழிபடும் ‘அன்னை மரியாள்’ போன்ற ஆடைகளை அணிந்து அண்மையில் கந்தானை பகுதியில் நடமாடிய பெண் ஒருவரின் அடையாளங்களை காவல்துறையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
அண்மையில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட வீடியோ காட்சிகள் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியதுடன், குறித்த பெண் யார் என்பது தொடர்பான பல கேள்விகளையும் எழுப்பியது.
Fact Crescendo Sri Lanka என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையத்தளம் ஒன்றின் தகவல்களின்படி, கந்தானைப் காவல்துறையினரால் குறித்த பெண்ணிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் அவர் ஒரு ரஷ்ய நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் அவர் தியானத்தில் ஈடுபட்டதாகவும், இலங்கைக்கு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளதாக கந்தானை காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம், அந்த பெண் எவ்விதமான மனநோயினாலும் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள கந்தானை காவல்துறையினர், தியான உடையில் இருந்த குறித்த பெண் கந்தானையில் சுதந்திரமாக நடமாடிய போது, பல்வேறு காணொளி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேற்படி பெண்ணிடம் கந்தானை புனித செபஸ்தியார் தேவாலயத்தில் காவல்துறை விசாரணைகளை மேற்கொண்டதுடன், அவர் தேவாலயத்திற்கு சென்றதில்லை எனவும், அந்த ஆலயத்தில் அங்கம் வகிக்கவில்லை எனவும் தேவாலயம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந் நிலையில் இலங்கையில் தோன்றிய அன்னை மரியாள் குறித்து பல நாட்களாக எழுப்பப்பட்ட கேள்விக்கு தற்சமயம் விடை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.