பதவியை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள்: சிறீதரனிடம் சொன்ன சம்பந்தன்!
உட்கட்சி ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில் நடைபெறும் சூழ்ச்சிகளை முறியடித்து உடனடியாக மாநாட்டை நடாத்துமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழரசு கட்சியின் புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய இருவரும் இணைந்து நேற்றையதினம் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இந்த விடயங்கள் தொடர்பில் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழரசு கட்சியின் தலைமைப் பொறுப்பை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்வதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
இதேவேளை, நிருவாகிகள் தெரிவு தொடர்பில் இணக்க அடிப்படையில் எட்டப்பட்ட முடிவுகளை பொதுச்சபை அங்கீகரிக்காதவிடத்து அல்லது அத்தெரிவுகளில் குழப்பங்கள் நிலவுமிடத்து,தேர்தல் முறைமை மூலம் தெரிவுகளை நடாத்தி அன்றையதினமே மாநாட்டையும் நடாத்துமாறு இதன்போது அவர் மேலும் தெரிவித்திருந்ததாக அறியமுடிகிறது.