இலங்கைமுக்கிய செய்திகள்

வவுனியா நகரசபை மைதானத்தில் பெண்ணின் நகைகள் திருட்டு: இளைஞன் கைது!

வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞன் இன்றையதினம் (16.02) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடை பயிற்சிக்காக கடந்த சில நாட்களாக வவுனியா நகரசபை மைதானத்திற்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்றையதினம் வியாழக்கிழமை (15.02) மாலையும் நகரசபைக்கு சென்றுள்ளார். இதன்போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகரசபை வளாகத்தில் உள்ள மோட்டர் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனது மோட்டர் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்கு சென்றுள்ளார்.

நடைபயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டர் சைக்கிளை எடுப்பதற்காக குறித்த பெண் வருகை தந்த போது அவரது மோட்டர் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமை காவல் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் இரவு முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டையடுத்து தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜயத்திலக தலைமையில் பொலிஸ் சார்ஜன் திசாநாயக்கா (37348), பொலிஸ் கொன்டபிள்களான உபாலி (60945), தயாளன் (91792), ரணில் (81010) ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, பம்பைமடுப் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட ஆறு அரை லட்சம் ரூபாய் பெறுமதியான 4 பவுண் நகைகளும் உடமையில் இருந்து மீட்கப்பட்டதுடன், திருட்டுச் சம்பவத்தின் போது சந்தேக நபர் தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டர் சைக்கிளும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரையும், மீட்கப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button